அனுமதியின்றி விடுமுறை எடுத்தால் பென்சன் கட்..! அலறும் ஆசிரியர்கள்
அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் ஓய்வூதியம் தடுத்து நிறுத்துவது குறித்த பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில், முறையான அனுமதி இன்றி விடுப்பு விண்ணப்பம் ஏதும் அளிக்காமல் பணிக்கு வராமல் இருந்த காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் குடுத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கிடுவதற்கு தொடர்புடைய விதிகளை தளர்வு செய்து ஆணை வேண்டி கருத்துருக்கள் பெறப்பட்டன.
முறையான அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் ஏதும் அளிக்காமல் பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொண்டு இருந்தால் இது போன்ற விதி தளர்வு செய்து குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டிய நிலை தவிர்க்கப்படலாம் என அதில் கூறியிருந்தார்.
இந்நிலையில்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின்
மாநிலத் தலைவர் தியாகராஜன்
சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது,
பணிகாலத்தில் ஆசிரியர் ஒருவர் அனுமதி பெறாமல் விடுமுறை எடுத்தால் அவரின் ஒய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதனை பள்ளிகல்வித்துறை ரத்து செய்ய வேண்டும்.
அதேபோல் பள்ளிகல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் நடுவில் பணியில் இருந்து ஒய்வு பெற்றால் அவர்கள் அந்த ஆண்டு முழுவதும் பணியில் நீடிப்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் பணி ஒய்வு பெறும் நாளில் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பது மாணவர்களின் கல்வியை பாதிக்க கூடியது ஆகும்.
எனவே
பள்ளிக்கல்வித்துறையில் நிதிசுமையை கருத்தில் கொண்டு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை கல்வியாண்டின் இறுதிவரையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.






















































